திருப்பத்தூர் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டலாபிஷேக விழா
திருப்பத்தூர் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் மார்கழி 1-ந்தேதி அன்று கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சனை விழா தொடங்கி தினமும் நடைபெற்று வந்தது. மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் கோவில் மைய மண்டபத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு யாகவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மூலவரான அய்யப்பனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், நெய், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகை அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வெள்ளி அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். .இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் உற்சவர் மின்னொளி ரதத்தில் இரவு 7 மணிக்கு திருவீதி உலா கோவிலிலிருந்து புறப்பட்டு நான்குரோடு, தேரோடும் வீதி, அஞ்சலகவீதி, பஸ்நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப சேவா சங்கத்தினரும், மகரஜோதி யாத்திரை குழுவினரும் செய்திருந்தனர்.