பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மேலும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-07-10 18:45 GMT

மேலாண்மைக்குழு கூட்டம்

அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டு வருகிறது. அன்னவாசல் பகுதிகளில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இந்தநிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பள்ளி மேலாண்மை குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைவராக ரகுமத்நிஸா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் செந்தில்குமார், மலைக்குடிப்பட்டியில் வெள்ளையம்மாள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மண்ணவேளாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் தலைவர், துணைத்தலைவர் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆலங்குடி

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.

திருவரங்குளம்

திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பார்வதி, துணைத்தலைவர் உள்ளிட்ட 20 நபர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இதேபோல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வல்லத்திராகோட்டை, மாஞ்சான் விடுதி, வெண்ணாவால்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது.

விராலிமலை

விராலிமலை அருகே வடுகப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கலந்து கொண்ட பெற்றோர்களே நேரடியாக உறுப்பினர்களை தேர்வு செய்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக புவனேஷ்வரி, துணை தலைவராக ரேணுகா உள்பட 20 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மணமேல்குடி

மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள புதுக்குடி, பொன்னகரம், கோலேந்திரம், கோபாலபுரம், கோட்டைப்பட்டினம் பெண்கள், ஜெகதாப்பட்டினம் இடையாத்திமங்கலம் கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய உயர் நிலை பள்ளிகளிலும் மற்றும் மணமேல்குடி ஆண்கள், பெண்கள், கோட்டைப்பட்டினம் பெருமருதூர் அம்பலவானணேந்தல், கட்டுமாவடி மற்றும் அம்மாப்பட்டினம் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத்தலைவர், கல்வியாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவர் தேர்வு நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷப்னம் தலைமை வகித்தார். இதில் அகிலா சீனிவாசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேவி பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராமு, ஊராட்சித்தலைவர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவியாக சத்யகலா, துணைத்தலைவியாக ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல கருப்புக்குடிப்பட்டி, திருக்களம்பூர், வார்பட்டு, மேலைச்சிவபுரி, காரையூர், சடையம்பட்டி, மேலத்தானியம், நல்லூர், நகரப்பட்டி, பொன்.புதுப்பட்டி ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்