போதையில் மோட்டார்சைக்கிளில் ஏற முயன்றவர் தடுமாறி விழுந்து சாவு

அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் மோட்டார்சைக்கிளில் ஏற முயன்ற தொழிலாளி தடுமாறி விழுந்து பலியானார்.;

Update:2023-04-11 18:57 IST

ஆரணி

அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் மோட்டார்சைக்கிளில் ஏற முயன்ற தொழிலாளி தடுமாறி விழுந்து பலியானார்.

வேன் டிரைவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் குமார் (வயது 36). நெசவு தொழில் செய்து வந்த இவர் போதிய வருமானம் கிடைக்காததால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும் போளூர் அருகே உள்ள சந்தவாசலை அடுத்த நாராயண மங்கலம் கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கோபிகா, ஷர்மிளா, மோனிகா என்ற 3 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட தகராறால் சத்யாவும், குமாரும் ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.

மனைவியை பிரிந்த குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மதுவுக்கு அடிமையாகி விட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலையிலிருந்து விடுமுறைக்கு வந்தவர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். போதையில் திரிந்த அவர் உணவும் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார்.

தள்ளாடினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் படுத்து கொண்டு இருந்தார். பின்னர் எழுந்த குமார், நண்பர் தரணியை அழைத்துக்கொண்டு மது அருந்த சென்றுள்ளார்.

அங்கு மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு வந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இது சம்பந்தமாக தரணி, அவரது தந்தை சம்பத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த அவர் தரணியுடன் சேர்ந்து மகன் குமாரை ஆரணி அரசு மருத்துவமனை கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் குமார் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக சம்பத் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

இந்த நிலையில் கணவன் இறந்த தகவல் அறிந்த குமாரின் மனைவி சத்யா பதறி அடித்துக்கொண்டு வந்தார். தன் கணவரின் உடலை பார்க்க கூட அனுமதிக்கவில்லை அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ஆரணி தாலுகா போலீசில் அவர் புகார் செய்தார்.

ஆரணி தாலுகா போலீசார் அதுபோல எந்த தகவலும் இல்லை. அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்