சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்புவதாக மிரட்டல் விடுத்தவர் கைது
சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்புவதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நான் பொறுப்பேற்ற உடன் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5 ஆயிரம் தராவிட்டால் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவரை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த ஏசு மகன் கோபி (வயது20) என்பவர் சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 8428103090 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.