காதலிக்கு பரிசளிக்க விலை உயர்ந்த நாய்க்குட்டியை திருடியவர் கைது
விருகம்பாக்கம் அருகே காதலிக்கு பரிசளிக்க விலை உயர்ந்த நாய்க்குட்டியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
விருகம்பாக்கம்,
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியில் வீடுகளின் முன்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதில் இருக்கும் பேட்டரிகள் அடிக்கடி திருடு போய் வந்தது. இது சம்பந்தமாக விருகம்பாக்கம் போலீசுக்கு புகார்கள் வந்தன.
இந்தநிலையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் இருந்த விலை உயர்ந்த நாய்க்குட்டியை மர்மநபர் திருடிச்சென்று விட்டதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
வாலிபர் கைது
அதில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் நாய்க்குட்டியை திருடிச்சென்றது ஒரே நபர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம், சாலிகிராமத்தை சேர்ந்த சுஜித் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுஜித், தனது அலுவலகத்துக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டரில் சென்று வீடுகளுக்கு முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதில் இருக்கும் பேட்டரிகளை திருடியதும், மேலும் தனது காதலிக்கு விலை உயர்ந்த நாய்க்குட்டியை பரிசாக கொடுக்க விரும்பிய அவர், பேட்டரி திருடச்சென்ற வீட்டில் இருந்த விலை உயர்ந்த நாய்க்குட்டியையும் திருடியதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், பேட்டரிகள், விலை உயர்ந்த நாய்க்குட்டியை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நாய்க்குட்டியை அதன் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.