கபாலீசுவரர் கோவில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது
கபாலீசுவரர் கோவில் நுழைவு வாயிலில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.;
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற கபாலீசுவரர் கோவில் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலில் கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மது போதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்தார்.
அதிர்ஷ்டவசமாக கோவிலின் கதவு சேதம் அடையவில்லை. கோவிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் கோவிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற சமயம் கோவில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்றும், கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோவில் அருகேயுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில் மர்ம நபர் அதே பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதுவதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கபாலீசுவரர் கோவில் முன்பு தீ வைத்ததாக அனகாபுத்தூரை சேர்ந்த தீனதயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக கபாலீசுவரர் கோவில் நுழைவு வாயிலில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.