வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் மன்னிப்பு கோரும் வீடியோ வெளியீடு

வடமாநில தொழிலாளர்களிடம் பிரபலமடைவதற்காக பொய்யான வீடியோவை பரப்பியதாகவும் மனோஜ் யாதவ் ஒப்புக்கொண்டார்.;

Update:2023-03-07 19:54 IST

சென்னை,

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.

இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர், போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட மறைமலைநகர் பகுதியில் இருந்து வீடியோ வெளியிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், வீடியோவை வெளியிட்ட நபரின் பெயர் மனோஜ் யாதவ் என்பது, அவர் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக கட்டுமான பணியில் வேலை செய்து வந்ததார் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மனோஜ் யாதவின் செல்போன் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மனோஜ் யாதவ், தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாகவும், வடமாநில தொழிலாளர்களிடம் பிரபலமடைவதற்காக பொய்யான வீடியோவை பரப்பியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் இத்தகைய வதந்தியை பரப்புவதன் மூலம் புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் சலுகைகள் வாங்கித்தர முயன்றதாகவும் மனோஜ் யாதவ் போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரும் வீடியோ வெளியாகியுள்ளது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்