அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகள்

சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து மது குடித்தும் அசுத்தம் செய்தும் நாசம் செய்வார்கள் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.

Update: 2024-06-07 05:52 GMT

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சாலவன்குப்பத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தொல்லியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு செய்தபோது, பூமிக்கடியில் புதைந்திருந்த சங்க கால முருகன் கோவிலை கண்டுபிடித்தனர். இந்த கோவில் மிகவும் பழமையானது என்று அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

பெரும்பாலான இந்து கோவில்களை போல் அல்லாமல் இந்த கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பாகும். இந்த கோவிலின் முகப்பு வாயிலில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட வேல் இருப்பதையும் காணலாம்.

தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முருகன் கோவிலை சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து மது குடித்தும் அசுத்தம் செய்தும் நாசம் செய்வார்கள் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.

19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த முருகன் கோவிலில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், இந்திய தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவினர் பழங்கால முறையில் கடுக்காய், வெல்லம் கலந்த சுண்ணாம்புக்கலவை மூலம் பூசி பராமரிப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.

கோவில் கட்டுமானத்தில் உள்ள செங்கற்களில் உள்ள தூசிகள் அகற்றப்பட்டு, பூச்சிகள், வண்டுகள் அரிக்காத சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்கு மேல் இந்த பணிகள் நடைபெறும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்