மகாத்மா காந்தி பொது நூலகம்; கலெக்டர் திறந்து வைத்தார்
புளியரை அருகே மகாத்மா காந்தி பொது நூலகத்தை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
செங்கோட்டை:
அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமத்தை தத்தெடுத்து கிராமப் பணிகளை அகில இந்திய காந்திய இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் புளியரை அருகே உள்ள மடத்தரைப்பாறை கிராமத்தில் பொது நூலகம் வேண்டும் என்று அகில இந்திய காந்திய இயக்கத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் அங்கு பொது நூலகம் கட்டிக் கொடுக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், மகாத்மாவின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று பாராட்டி பேசினார். அகில இந்திய காந்திய இயக்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கி பேசும்போது, எதிர்காலத்தில் இதுபோன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை தத்தெடுத்து அரசு உதவியுடனும் மற்றும் காந்தி அன்பர்கள் உதவியுடன் மக்கள் உதவியுடனும், சிறப்பான காந்திய பணிகளை மேற்கொள்ளப் போவதாக கூறினார்.
விழாவில் புளியரை பஞ்சாயத்து தலைவர் அழகிய சிற்றம்பலம், காந்தியவாதிகள் ராம் மோகன், முத்துசாமி, விஜயலட்சுமி, திருமாறன், அன்பு சிவன், நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். முடிவில் கிராம மக்கள் நன்றி கூறினர்.