மகாபிரத்யங்கரா பூஜை

சாணார்பட்டி அருகே மகாபிரத்யங்கர பூஜை நடந்தது.

Update: 2023-04-19 19:00 GMT

சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லாத்தான்பாறையில் ஆதிபரஞ்சோதி சகலோக சபை கோவில் உள்ளது. இந்த கோவிலில், சித்திரை மாத அமாவாசையையொட்டி மகாபிரத்யங்கரா தேவி பூஜை நேற்று இரவு நடந்தது. இதனை, கோவில் நிர்வாகி திருவேங்கட ஜோதபட்டாச்சாரியார் நடத்தினார். பூஜையையொட்டி பிரத்யங்கராதேவி அம்மன், நரசிங்கபெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு குண்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காய்ந்த மிளகாய்கள், வெண் கடுகு ஆகியவைகள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோவை, கடலூர், திருப்பூர், உடுமலைபேட்டை சென்னை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் தங்களது வேண்டுதல்களை பனை ஓலைகள் மற்றும் காகிதத்தில் எழுதி யாக குண்டத்தில் போட்டனர். மேலும் எலுமிச்சை பழங்களை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர். வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் ஆன்லைன் வழியாக பூஜையில் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று காலை அங்குள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் வடமாலை சாத்தி சிறப்பு பூஜையும், கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோ பூஜையும் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பசுக்களுக்கு அகத்திகீரை, தவிடு, மாட்டு தீவனங்கள் கொடுத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்