மகாளய அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-09-23 02:51 GMT



விருதுநகர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வருகிற 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கப்படுவதால் நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்புகள் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்