ஓசூர் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

சேவூரில் ஓசூர் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.;

Update:2023-06-29 15:39 IST

ஆரணி

ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் ஓசூர் அம்மன் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.

முன்னதாக கோவில் எதிரே நவாக்கினி யாக குண்டம் அமைக்கப்பட்டது. அதேபோல் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் என தனித்தனியே யாக மேடை, யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பனர்களால் 4 கால யாக ஹோம பூஜைகளை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.

பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மங்கள வாத்தியங்களுடன் கோவில் வலம் வந்து ராஜகோபுரம், கருவறை கோபுரம், நவக்கிரக கோபுரம் மற்றும் கருவறை ஓசூர் அம்மனுக்கும், விநாயகர், சுப்பிரமணியர் நவக்கிரகங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.

விழாவில் சென்னை குமரன் சில்க்ஸ், சென்னை குமரன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் குடும்பத்தினர், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ராட்டினமங்கலம் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் - கற்பகநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிராமம் முழுவதும் ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது.

இரவில் உற்சவர் அம்மனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நூதன புஷ்பபல்லக்கில் திருவீதி உலா வாண வேடிக்கைகளுடன் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் ஓசூர் அம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்