மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண் இயக்குனர் சித்திக் ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண் இயக்குனர் சித்திக் ஆய்வு செய்தார்
மதுரையில் ஒத்தக்கடையையும், திருமங்கலத்தையும் இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதாவது திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், சிம்மக்கல், கோரிப்பாளையம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்ட்டு வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டது.
அதன்படி தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15-ந்தேதி அரசிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் மதுரையில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள மேலமாசி வீதி உள்ளிட்ட பகுதியில் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துடன் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின் அவர் கூறும் போது, மதுரை நகரின் மையப் பகுதிகளில் பூமிக்கு அடியில், திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டமானது, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.