பள்ளிக்கூடம் அருகில் கோவில் கட்டுவதற்கு தடை கேட்டு வழக்கு- அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிக்கூடம் அருகில் கோவில் கட்டுவதற்கு தடை கேட்டு வழக்கில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-16 20:33 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, புலவஞ்சி மதுக்கூரைச் சேர்ந்த அண்ணாதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுக்கூர் தெற்கு படப்பைக்காடு கிராமத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் சேதம் அடைந்தது. இதனால் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தற்போது புதிய கட்டிடப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பள்ளியின் அருகில் இதுவரை எந்த மதம் சார்ந்த கட்டிடமும் இல்லை. ஆனால் தற்போது இந்த பள்ளியின் அருகில் திடீரென புதிதாக கோவில் கட்டுமான பணிகளை சிலர் தொடங்கியுள்ளனர். இதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை. பல்வேறு வகையான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் கோவில் கட்டுவது சட்டவிரோதம். எனவே பள்ளிக்கூடம் அருகில் கோவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்