பிரசவ கால சம்பளத்தை திரும்பப்பெறும் சுற்றறிக்கைக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பிரசவ கால சம்பளத்தை திரும்பப்பெறும் சுற்றறிக்கைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-12 21:05 GMT

கோப்புப்படம்

மதுரை,

சிவகங்கையை சேர்ந்த சந்தானலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார அமைப்பின் கீழ் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2021-ம் ஆண்டில் பிரசவத்துக்காக 9 மாதம் மகப்பேறு விடுப்பில் இருந்தேன். உரிய விதிமுறைகளின்படி 9 மாதங்களுக்கும் உரிய சம்பளம் வழங்கினார்கள்.

இந்நிலையில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு அளித்த பிரசவ காலத்துக்கான சம்பளத்தை அவர்களிடம் இருந்து வசூலிக்கும்படி தேசிய சுகாதார அமைப்பின் இயக்குனர் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மகப்பேறு விடுமுறையை பணி நாட்களாக கருதி சம்பளம் அளிக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஏற்படுத்தப்பட்ட விதிமுறை. அதை மீறும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பது சட்டவிரோதம். எனவே தேசிய சுகாதார அமைப்பின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், தொகுப்பூதிய பணியாளர்களிடம் இருந்து பிரசவ கால சம்பளத்தை திரும்பப்பெறும் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்