அனைத்து வகையான பொதுநல வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு விசாரிக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
13 மாவட்டங்கள் தொடர்புடைய பொதுநல வழக்குகளை மட்டுமே ஐகோர்ட்டு மதுரை கிளை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றி அமைக்கப்பட்டது.;
சென்னை,
மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களை பராமரிப்பது தொடர்பான பொதுநல வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் கடந்த 2021-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அப்போதைய ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
பின்னர், "நாடு முழுவதும் மற்றும் மாநிலம் முழுவதும் தொடர்புள்ள பொதுநல வழக்குகளை ஐகோர்ட்டு மதுரைக் கிளை விசாரிக்கக்கூடாது. இந்த வகையான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். ஐகோர்ட்டு மதுரை கிளை, தனக்கு அதிகாரம் உள்ள 13 மாவட்டங்கள் தொடர்பான பொதுநல வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில், எம்.எம்.பி.ஏ., வக்கீல சங்கம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எம். அஜ்மல்கான் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஐகோர்ட்டு மதுரை கிளை 2004-ம் ஆண்டு தொடங்கும்போது, இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டில் எந்த விதமான பொதுநல வழக்குகள் விசாரிக்கப்படுகிறதோ, அந்த வழக்குகளை ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் விசாரிக்கலாம் என்றுதான் விதிகள் உள்ளன.
13 மாவட்ட வழக்குகளை மட்டுமே விசாரிக்கவேண்டும் என்று கூறவில்லை. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்த அளித்த தீர்ப்பில் கூட, இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.
எனவே, 13 மாவட்டங்கள் தொடர்புடைய பொதுநல வழக்குகளை மட்டுமே ஐகோர்ட்டு மதுரை கிளை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்கின்றோம். மதுரை கிளையில் அனைத்து வகையான பொதுநல வழக்குகளையும் விசாரிக்கலாம்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.