மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சட்ட துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ பங்கேற்கின்றனர்.
மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சட்ட துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ பங்கேற்கின்றனர்.
கூடுதல் கட்டிடம்
மதுரை மாவட்ட கோர்ட்டில் கூடுதல் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நாளை (25-ந் தேதி) மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடக்கிறது.
நாளை காலை 10.30 மணி அளவில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.ராஜா வரவேற்று பேசுகிறார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமை தாங்கி, மதுரை மாவட்ட கோர்ட்டில் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, தொடக்க உரை ஆற்றுகிறார்.
மயிலாடுதுறை கோர்ட்டு
பின்னர் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை, மதுரையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்து பேசுகிறார். பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
அமைச்சர்கள், நீதிபதிகள்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். விழா நிறைவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி உரையாற்றுகிறார்.