8 ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்காமல் உள்ளது - மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

8 ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்காமல் உள்ளது குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

Update: 2023-03-11 20:45 GMT


மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் வான்போக்குவரத்துதுறை சார்பில் ஆலோசனை கூட்டம் நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கம் குறித்து குரல் எழுப்ப உள்ளேன். மேலும், கோலாலம்பூர், மஸ்கட், சார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கான புதிய விமானத்தடங்களை அறிவிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை தொடங்க வேண்டும் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்ப உள்ளேன். மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்காமல் உள்ளது. இதற்குபின் வந்த வாரணாசி, சூரத், அகர்தலா போன்ற விமான நிலையங்களுக்கு சர்வதேச அந்தஸ்து கொடுக்கப்பட்டு விரைவாக அதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது.

ரெயில்வே திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தை குறிப்பாக விருதுநகர் தொகுதியை வஞ்சிக்கிறது. மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஒருசில இடங்கள் மட்டும் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் தற்போது தமிழக நிதி அமைச்சரின் முயற்சியால் முதல்கட்ட நிலையில் உள்ளது. இனி வரும் காலங்களில் அடுத்தடுத்த நிலையைஅடையும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 82 சதவீதம் நிதி உதவி அளிக்க உள்ள ஜப்பானின் பிரதமர் வருகின்ற 19, 20-ந்தேதிகளில் இந்தியா வருகிறார். எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்