நாகையில் பரவும் 'மெட்ராஸ் ஐ'
நாகையில் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகையில் 'மெட்ராஸ் ஐ' பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'மெட்ராஸ் ஐ'
தமிழ்நாட்டில் இப்போது பலர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டும், கண்கள் சிவந்த நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. 'மெட்ராஸ் ஐ' என்று கூறப்படும் கண் வெண்படல அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நாகையிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் கருப்பு கண்ணாடி அணிந்த படி சிலர் சாலையில் சென்று வருகின்றனர். மருந்து கடைகளிலும் கண் வலி மருந்தும், கருப்பு கண்ணாடிகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேகமாக பரவுகிறது
நாகையில் இந்த நோய் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நோய் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஒரு சில மாணவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வகுப்பறையில் தனிமைப்படுத்தப்பட்டும், விடுப்பு எடுத்து வீட்டுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.
வேகமாக பரவும் இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிகுறிகள்
இதுகுறித்து நாகையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறுகையில்,
'மெட்ராஸ் ஐ' நோய் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டவுடன் கண் சிவந்து அரிப்பு, எரிச்சல் ஏற்படும். மேலும் கண்ணில் மண் விழுந்ததைப்போல உறுத்தும், கண்களில் இருந்து கண்ணீர் வடிதல், காலையில் தூங்கி எழும் போது இமைகள் ஒட்டிக்கொள்ளும், சிலருக்கு கண்களில் இருந்து ரத்தம் கலந்த நீர் வடிதல், கண் மங்கலாக தெரிதல் போன்ற அறிகுறிகளும் ஏற்படும். சிலருக்கு கண் இமைகளில் வீக்கம் ஏற்படும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பகள் ஏற்படும். பெரும்பாலும் ஒன்றன்பின் ஒன்றாக இரு கண்களிலும் தொற்று ஏற்படும். இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.
3 நாட்களில் சரியாகி விடும்
சரியான சிகிச்சை பெற்று மருந்துகளை போட்டு வந்தால் 3 அல்லது 5 நாட்களில் நோய் சரியாகிவிடும். ஆனால், இந்த நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு எளிதாக பரவி விடும்.
பொதுவாக மழைக்காலங்களில் தான் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போது பரவுகிறது.
தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் அதிகமாக பரவுகிறது.
தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்
'மெட்ராஸ் ஐ' நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருந்து எடுத்து கொள்ளக்கூடாது. கண் டாக்டரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். இந்த ேநாயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமும், அவர்கள் பயன்படுத்திய துண்டு, கைக்குட்டை, படுக்கை விரிப்புகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலமுமே, அடுத்தவர்களுக்கு பரவாமல் தடுக்கமுடியும் என்றார்.