குன்றத்தூர் அருகே குடிபோதையில் அக்காவை தாக்கிய மாமாவை கொலை செய்த மச்சான்

குன்றத்தூர் அருகே குடிபோதையில் அக்காவை தாக்கிய மாமாவை கொலை செய்த மச்சானை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-16 10:44 GMT

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன்

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தேவி (38). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் மீது செல்போன் பறிப்பு மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மனைவியை விட்டு பிரிந்து சென்ற வெங்கடேசன் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மனைவியின் வீட்டிற்கு வந்த வெங்கடேசன் குடிபோதையில் மனைவியை அடித்து, உதைத்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மனைவியிடம் வெங்கடேசன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தேவியின் தம்பி சதீஷ்குமார் (40) தட்டி கேட்டபோது வெங்கடேசனுக்கும், சதீஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சதீஷ்குமார் தாக்கியதில் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். உடனே, இச்சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு காரணமான சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்