வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் மனைவியுடன் பேராசிரியர் தஞ்சம்
வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் மனைவியுடன் பேராசிரியர் தஞ்சம் அடைந்தார்.
வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 29). இவர் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பக்கத்து ஊரான முள்ளிப்பாடியை சேர்ந்த சுதாராணிக்கும் (23) இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு அவர்கள் வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதேபோல் வடமதுரை அருகே உள்ள பாகாநத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (23). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (20). இவர் பி.காம் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவர்கள் 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.