மணல் குவாரிகளில் முறைகேடு:தமிழக அரசுக்கு ரூ.4,500 கோடி இழப்புலாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
மணல் குவாரிகளில் முறைகேடு காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.4,500 கோடி இழப்பு ஏற்படுவதாக மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
அலட்சிய போக்கு
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் ராஜசேகர் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு மூலம் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதுபோல் நடந்து வருகிறது. மணல் விலையை நிர்ணயம் செய்வது, பொதுப்பணித்துறை மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
லாரி உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆன்லைனில் 10 சக்கர லாரிகளுக்கு 3 யூனிட் மணல் ரூ.7,950, 6 சக்கர லாரிகளுக்கு 2 யூனிட் மணல் ரூ.5,300 செலுத்தி பதிவு செய்து அதன் மூலம் வரிசைப்படி வாகனங்களில் ஏற்ற வேண்டும் என்பது அரசின் விதிமுறை.
ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து மணல் லோடு ஏற்ற வரும் வாகனங்களில் 10 சக்கர லாரிகளில் 3 யூனிட்டுக்கு ஆன்லைனில் செலுத்திய பணம் இல்லாமல் கூடுதலாக ரூ.6,550, 6 சக்கர லாரிகளில் 2 யூனிட்டுக்கு கூடுதலாக ரூ.2,700 குவாரி குத்தகையாளர்கள் மூலம் பெறப்படுகிறது.
ரூ.4,500 கோடி இழப்பு
இவ்வாறு கூடுதலாக பெறப்படும் பணம் நேரடியாக அரசின் கஜானாவிற்கு செல்லாமல், தனி நபரின் கஜானாவிற்கு செல்கிறது. அதனால் ஒரு யூனிட் மணல் விலை ரூ.1,000 என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மணலை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குவாரியில் ஆன்லைனில் பதிவு செய்த 10 முதல் 15 லாரிகளுக்கு மட்டுமே கண்துடைப்புக்காக மணல் லோடு செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு குவாரியிலும் கள்ளத்தனமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு முறைகேடாக தினசரி 500 முதல் 700 லாரிகள் வரை மணல் லோடிங் செய்யப்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறார்கள்.
அதன்படி ஒரு நாளைக்கு ரூ.15 கோடி முதல் ஆண்டுக்கு சுமார் ரூ.4,500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் தமிழகத்தில் செயல்படும் குவாரிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.18.66 கோடி வருவாய் பெறப்பட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
இவற்றை அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக அனைத்து லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், பொறியாளர்கள், மணல் உபயோகிப்பாளர்களை திரட்டி போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது சங்க செயலாளர் பரமசிவம், துணை செயலாளர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, தங்கவேல், மணிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.