சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 8 ஆண்டு சிறை நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update:2023-03-04 00:15 IST

நாகர்கோவில்:

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

காரில் கடத்தப்பட்ட சிறுமி

மார்த்தாண்டம் அருகே உள்ள இரவிபுதூர்கடை வலியவிளையை சேர்ந்தவர் முருகேசன் (வயது53). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கு 14 வயதுடைய சிறுமி அறிமுகமானார். அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 11-5-1998 அன்று முருகேசன் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் முருகேசன் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் சிறுமியின் வாயை கையால் பொத்தி காரில் கடத்தி சென்றார்.

பாலியல் பலாத்காரம்

கார் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்ததும் சிறுமியை முருகேசன் மும்பைக்கு ரெயிலில் கடத்தி சென்றார். காரில் இருந்த அவரது நண்பர்கள் 3 பேரும் குமரி மாவட்டம் திரும்பினர்.

மும்பைக்கு சென்றதும் அங்கு கணவன், மனைவி என கூறி வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கினர். அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து சிறுமியை முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை சென்னைக்கு கடத்தி வந்து அங்குள்ள உறவினர் வீட்டில் ஒரு மாதகாலம் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிைடயே சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுமியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-9-1998 அன்று சிறுமி சென்னையில் இருந்து தப்பி நாகர்கோவிலுக்கு வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

8 ஆண்டு சிறை

தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் தனக்கு நடந்த கொடூரங்களை கூறி அழுதார். இதையடுத்து முருகேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் குற்றவாளியாக முருகேசனை அறிவித்து அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மீதமுள்ள 3 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.

இந்த சம்பவம் நடந்தபோது போக்சோ வழக்கு இல்லாத காலக்கட்டம் என்பதால் தண்டனை அளவு குறைந்துள்ளது. இல்லையென்றால் குறைந்தது ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும் என வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்