இப்படி செய்வதுதான் சரியாக இருக்கும்..! தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வைத்த முக்கிய கோரிக்கைகள்

பொதுமக்கள் அளிக்கும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு எந்திரத்திற்கு போவதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.;

Update: 2024-02-23 12:28 GMT

சென்னை:

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான 2 நாட்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராஜீவ்குமார் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷனரிடம் அரசியல் கட்சியினர் முன்வைத்தனர்.

குறிப்பாக, தேர்தல் வெளிப்படைத்தன்மையோடு அச்சம், பதட்டம் இல்லாமல் நியாயமாக நடக்க வேண்டும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய விவிபேட் ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும், பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பெரும்பாலான பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

பின்னர் அந்த கோரிக்கைகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பேட்டி அளித்தனர்.

தி.மு.க. (ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ):- கடந்த தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு அடுத்தபடியாக கட்டுப்பாட்டு எந்திரம் வைக்கப்பட்டு இருக்கும். அதன் பின்னர் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவிபேட் எந்திரம் இருக்கும். ஆனால் இந்த முறை வாக்குப்பதிவு எந்திரத்துக்கு அடுத்ததாக விவிபேட் எந்திரத்தை வைக்கின்றனர். இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. பொதுமக்கள் அளிக்கிற வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு எந்திரத்திற்கு போவதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். வாக்கு எண்ணும்போது விவிபேட்டில் உள்ள வாக்குகளை 100 சதவீதம் பார்க்க முடியாது என்றும் எண்ண முடியாது என்றும் சொல்வது சரியல்ல.

இதுபோன்ற வழிமுறைகளில் 1 முதல் இருந்து 2 சதவீதம்வரை தவறு நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷனே ஒப்புக்கொள்கிறது. ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 சதவீதம் என்றால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வரும். ஒரு தொகுதியினுடைய முடிவை நிர்ணயிக்கும் அளவு அது. எனவே இதை மாற்றி அமைக்க வேண்டும்.

அ.தி.மு.க. (ஜெயக்குமார், இன்பதுரை):- தேர்தலை நியாயமாக, அமைதியாக, ஜனநாயக முறையில், விருப்பு வெறுப்பின்றி நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக களைப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் பதட்டமான வாக்குச்சாவடிகளை தேர்தல் கமிஷன் கண்டறிய வேண்டும். அந்த மையங்களில் கூடுதல் துணை ராணுவப் படை, சிசிடிவி கேமரா நிறுவப்பட வேண்டும். உள்ளூர் காவல்துறை, ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளதால், வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவ வீரர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும்.

தமிழக பா.ஜ.க. (முன்னாள் டிஜிபி பாலச்சந்திரன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன்):- தமிழ்நாட்டில் இருக்கும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் முக்கியமானவை என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். ஆளும்கட்சி தலையீட்டினால் கேமராவிற்கான டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகுந்த துணை ராணுவ படைகளை நிறுத்த வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்