'சீல்' வைக்கப்பட்ட டாஸ்மாக் பாரின் பூட்டு உடைப்பு
மயிலாடும்பாறையில் ‘சீல்’ வைக்கப்பட்ட டாஸ்மாக் பாரின் பூட்டை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 77 டாஸ்மாக் பார்கள் நேற்று முன்தினம் அதிகாரிகளால் 'சீல்' வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மயிலாடும்பாறை டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டு வந்த பாரில் 'சீல்' வைக்கப்பட்டிருந்த பூட்டை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் கருப்பையா கடமலைக்குண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்மராஜபுரத்தை சேர்ந்த முரசு (வயது 30) என்பவர் டாஸ்மாக் பாரில் 'சீல்' வைத்த பூட்டை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முரசை கைது செய்தனர்.