10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
சம்பள உயர்வு
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், குப்பை வாகன டிரைவர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், அரசு அறிவித்த ரூ.1,400 ஊதிய உயர்வு, பணி ஓய்வு பெறும் ஆப்ரேட்டர்களுக்கு பணிக்கொடை, தூய்மை காவலர்களுக்கும், பள்ளி தூய்மை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு, ஊராட்சிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர், இது தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து அளித்தனர்.