உள்ளாட்சி இடைத்தேர்தல் காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தி.மு.க. வெற்றி

உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்த காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றார்.

Update: 2022-07-13 16:24 GMT

தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் 1,759 ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் வேணுகோபால் 568 ஓட்டுகள் பெற்றார். இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் 1,191 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கண்ணன் அறிவித்தார்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் அனுமந்தண்டலம் ஊராட்சி 6-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தம் 175 ஓட்டுகள் பதிவானது. அதில் ஹரிதாஸ் 94 ஓட்டுகள் பெற்றார். வெங்கடேசன் 80 ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. கருவேப்பபூண்டி ஊராட்சி 3-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தம் 165 ஓட்டுகள் பதிவானது. 3 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. சசி 136 ஓட்டுகளும் ராதிகா 26 ஓட்டுகளும் பெற்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சிவபுரம் ஊராட்சியில் உள்ள 5-வது வார்டில் நடந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 158 ஓட்டுகளில் மகேஸ்வரிக்கு 91 ஓட்டுகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட களஞ்சியம் 63 ஓட்டுகளும் பதிவானது மீதம் 4 ஓட்டு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 91 ஓட்டுகள் பெற்ற மகேஸ்வரி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலரும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான சீனிவாசன் மகேஸ்வரிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் காட்டாங்கொளத்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் திம்மாவரம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கே.வேணி 368 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மோகனா 137 ஓட்டுகளும், மாலா 84 ஓட்டுகளும், லோகம்மாள் 10 ஓட்டுகளும் பெற்றனர்.

இதனையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர் வேணிக்கு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான சாய் கிருஷ்ணன் சான்றிதழை வழங்கினார். ஓட்டு எண்ணிக்கையையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள, திரிசூலம் மற்றும் நன்மங்கலம் ஊராட்சிகளின், முதல் வார்டுகளுக்கான, இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, கடந்த 9-ந் தேதி நடந்தது. தொடர்ந்து, ஓட்டுச்சீட்டுக்கள் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி இருந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை, 8 மணிக்கு துவங்கிய நிலையில், முதலாவதாக திரிசூலம் ஊராட்சியின், முதல் வார்டில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டது.

இதில், சுயேச்சையாக போட்டியிட்ட ஊராட்சி தலைவர் உஷாவின் கணவர் தி.மு.க. பிரமுகர் மாரிமுத்து, 546 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை, எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க., பிரமுகர், ஆனந்தி 345 ஓட்டுக்கள் பெற்று, 2-ம் இடம் பெற்றார்.

அதேபோல், நன்மங்கலம் ஊராட்சியின், முதல் வார்டிற்கான தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தி.மு.க. பிரமுகர் பாலாஜி, 482 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை, எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பூமிநாதன், 438 ஓட்டுக்கள் பெற்று, 2-ம் இடம் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்