மதிப்பு கூட்டு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்மை சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க விருப்பம் உள்ள தனி நபர், மகளிர் சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியோருக்கு 35 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கடன் அளிக்கப்படும்.
ஆதார் அட்டை, புகைப்படம், பான் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், கல்வி சான்றிதழ், ரேஷன் அட்டை, எந்திரத்திற்கான விலைப்பட்டியல், வாடகை ஒப்பந்தம் அல்லது நிலப்பத்திரம், மின் கட்டணம் ரசீது ஆகியவற்றையும்,
காளான், மஞ்சள், மாங்காய், இஞ்சி, பனை, கரும்பு, வெங்காயம், தேன், ஊட்டச்சத்து மாவு, முளை கட்டிய பயிறு வகைகள், பழ கூழ்கள், ஜாம், கீர் வகைகள் என அனைத்து வகை வேளாண்மை உணவு சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில்களுக்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உணவு பதப்படுத்தும் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பங்கு கொண்டு அவர்தம் வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி லாபத்தை மும்மடங்காக பெருக்கி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.