திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்றிச்சென்ற வாகன உதிரிபாகங்கள் காரின் மீது சரிந்து விழுந்து விபத்து

திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்றிச்சென்ற வாகன உதிரிபாகங்கள் காரின் மீது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் டிபன் சாப்பிட சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2022-09-02 08:41 GMT

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூரில் பொக்லைன் எந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை பூந்தமல்லி அடுத்த படூர் பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரி மூலம் பொக்லைன் எந்திரம் தயாரிப்பதற்கு தேவையான உதிரிபாகங்களை கொண்டு வந்தனர்.

அந்த லாரி திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை மணவாளநகர் பகுதியில் உள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது அந்த லாரியின் பின்னால் இருந்த உதிரிபாகங்கள் சரிந்து கீழே விழுந்தது.

அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது சரிந்து விழுந்ததால் அந்த கார் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கார் உரிமையாளர் ராஜேஷ் (27) போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் இருந்து போளிவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வந்துள்ளார். அப்போது காலை டிபன் சாப்பிடுவதற்காக காரை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

அவர் காரில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும், லாரியில் தடவாளங்களை முறையாக கம்பியால் கட்டாமல் கயிற்றால் கட்டி கொண்டு வந்ததால் பாரம் தாங்காமல் அறுந்து கீழே விழுந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக திருவள்ளூர் - ஸ்ரீபெரும்தூர் சாலையில் வந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் அணி வகுத்து நின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியுற்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கார் மீது விழுந்த உதிரிபாகங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்