எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு
எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புவரையான தொடக்க நிலை வகுப்புகள் நேற்று தொடங்கியது. பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புவரையான தொடக்க நிலை வகுப்புகள் நேற்று தொடங்கியது. பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பள்ளிக்கூடம் திறப்பு
தமிழ்நாட்டில் நடப்பு 2023-24 கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூடங்கள் கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டன. அன்றைய தினம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரையான மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கின.
இந்த நிலையில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புவரையான பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே அனைத்து மழலையர், தொடக்கப்பள்ளிக்கூடங்கள் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கின.
சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் தொடக்க நிலை பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வருகை தொடங்கியதால் ஆசிரிய -ஆசிரியைகளும் உற்சாகமாக இருந்தனர்.
அடம் பிடித்தனர்
எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகள் முதன் முதலாக பள்ளிக்கூடம் செல்லும் நாள் என்பதால் சற்று மிரண்டன. சில குழந்தைகள் பெற்றோருடன் உற்சாகமாக பள்ளிக்கூடம் வரை வந்து, அங்கு அவர்கள் விட்டு விட்டு செல்லும்போது அவர்களுடன் திரும்பி செல்ல அடம் பிடித்தனர். பல குழந்தைகள் அமைதியாக வகுப்பறைகளுக்குள் சென்று விளையாட தொடங்கின.
இதுபோல் 1-ம் வகுப்பு குழந்தைகளும் வீட்டிலேயே அடம் பிடித்து, கண்ணீர் விட்டும் சிறிது நேர பிரளயத்தை ஏற்படுத்திவிட்டே வகுப்புகளுக்கு புறப்பட்டு சென்றனர். பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்தும், கோவில்களுக்கு அழைத்துச்சென்று வழிபட்டும் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துச்சென்றனர்.
வரவேற்பு
அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் நேற்று குழந்தைகளுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வகுப்பறைகளுக்குள் செல்ல அடம் பிடித்த மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் கைகளை பிடித்து அழைத்துச்சென்று ஆதரவாக இருந்தனர். இதனால் சிறிது நேரத்தில் குழந்தைகள் சமாதானமாகின.
அரசு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் புதிதாக பள்ளிக்கூடத்துக்கு அடி எடுத்து வைத்த குழந்தைகளை ஆசிரியைகள் வாசலில் நின்று வரவேற்றனர்.
ஆரத்தி
மேலும் குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்தும், மேள, தாளங்கள் இசைத்தும் ஆசிரியைகள் வரவேற்பு அளித்தனர். குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இனிப்பு வழங்கப்பட்டது. எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு வந்த குழந்தைகளை வரவேற்கும் வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகள், பெற்றோர்கள் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். இதுபோல் புதிதாக பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள், பெற்றோரும் செல்பி பாயிண்ட்-ல் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதுபற்றி மாநகராட்சி பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி கூறும்போது, 'எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வரும் குழந்தைகள் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்புவரை 10 ஆண்டுகள் எங்களுடன் இருக்கப்போகிறார்கள். எங்கள் குழந்தைகளாக வாழப்போகிறார்கள். அவர்களை எங்கள் இல்லத்துக்கு வரவேற்பது போன்று வரவேற்கிறோம்' என்றார். இதுபோல் பள்ளிக்கூடத்தில் செயல்பாடு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அதில் பெற்றோரின் பங்கு குறித்தும் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து சில பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.