பயிர்களை சேதப்படுத்துவதால் வாழ்வாதாரம் பாதிப்பு:மக்னா யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விட வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்களை சேதப்படுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மக்னா யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-06-30 20:30 GMT

பொள்ளாச்சி

பயிர்களை சேதப்படுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மக்னா யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

யானை அட்டகாசம்

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடித்து கொண்டு வரப்பட்ட மக்னா யானையை டாப்சிலிப் வரகளியாறு பகுதிகளில் விட்டனர். அந்த யானை அங்கிருந்து பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னர் யானையை மீண்டும் பிடித்து வால்பாறை அருகே மானாம்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். மேலும் ரேடியோ காலர் பொருத்தி யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இதற்கிடையில் ரேடியோ காலர் பழுதானதால் யானையை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் யானை சேத்துமடை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கடந்த சில மாதங்களாக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை சரளப்பதி பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்த யானை, அங்கிருந்த கம்பி வேலிகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

போராட்டம் நடத்தப்படும்

சரளப்பதி பகுதியில் சுற்றித்திரியும் மக்னா யானை இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்னை மரங்களை சாய்த்தும், மா மரங்களை நாசம் செய்து வருகிறது. மேலும் பந்தல் காய்கறிகளையும் சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே தேங்காய்க்கு விலை இல்லாததால் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. எனவே யானையை பிடிக்கவில்லை என்றால் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்