வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கம், மான்களை பஸ்சில் சென்று பார்க்கும் வசதி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கம், மான்களை பஸ்சில் சென்று பார்க்கும் வசதியை நேற்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-03 08:46 GMT

வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காலகட்டத்தில் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டிருந்த சிங்கம் மற்றும் மான் உலாவிடங்கள் பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கம் மற்றும் மான் உலாவிட பகுதிகளில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சிங்கம் மற்றும் மான் உலாவிட பகுதியை மக்கள் ஏ.சி பஸ்சில் சென்று பார்க்கும் வசதியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

கியூ ஆர் குறியீட்டு மூலம் நுழைவுச்சீட்டு

இதனைத் தொடர்ந்து கியூ ஆர் குறியீட்டு மூலம் நுழைவுச்சீட்டு பெறும் வசதியையும் மற்றும் பூங்கா வனவிலங்கு ஆஸ்பத்திரியில் புதிய அறுவை சிகிச்சை அரங்கையும் அமைச்சர் திறந்து வைத்தார். பூங்காவில் உள்ள சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடம் 147 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புதர்காடு பகுதியாகும். தற்போது சிங்க உலாவிடத்தில் 7 சிங்கங்கள் அதில் 3 ஆண் சிங்கங்கள், 4 பெண் சிங்கங்கள் உள்ளன. பன்னர்கட்டா மற்றும் லக்னோ உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் (1 ஆண், 1 பெண்) கொண்டுவரப்பட்டன. மான்கள் உலாவிடப் பகுதியில் ஏராளமான கடமான், புள்ளிமான் மற்றும் கேளையாடு மான்கள் இருக்கின்றன.

ஏ.சி பஸ் வசதி

பார்வையாளர்களின் வசதிக்காக சிங்கம், மான் உலாவிடும் பகுதிக்கு செல்வதற்காக மட்டும் தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக மான்கள் உலாவிடத்தை அடையலாம். பாதுகாப்பு சுவர் மற்றும் சுற்றுச் சுவர் சீரமைக்கப்பட்டு, குளம் மற்றும் நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உலாவிடத்திற்கு செல்லும் வகையில் ஏ.சி பஸ் வாங்கப்பட்டுள்ளது. 

புலிகள் காப்பக இணையதளம்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கான புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த இணையதளம் காப்பகங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதுடன், ஓய்வு இல்லங்கள் மற்றும் வனச்சுற்று போன்ற வசதிகளையும் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளும் வகையில் அமைக்கபட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் நினைவு பொருட்கள் ஆன்லைனில் வாங்கும் வகையில் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலமாக புலிகள் காப்பகங்கள் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்க ஏதுவாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) சுப்ரத் மஹாபத்ரா, மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சீனிவாஸ் ரா.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் உதயன், மற்றும் வனத்துறையின் பிற மூத்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்