மத்திய அரசு போல் மாநில அரசும் வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்; தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மத்திய அரசுபோல் மாநில அரசும் வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-05-24 16:27 GMT

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான 'ஏற்றுமதி சிறப்பு விருதுகள்', சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கும் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின்(மெப்ஸ்) மேம்பாட்டு ஆணையர் டாக்டர் எம்.கே.சண்முகசுந்தரம் வரவேற்றார். இதில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு 7 துறைகளின் கீழ் 25 வகையான ஏற்றுமதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான 138 விருதுகளை சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கினார். இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணை வேந்தர் மாலினி சங்கர், மெப்ஸ் மேம்பாட்டு மண்டல இணை ஆணையர் அலெக்ஸ்பால் மேனன், மெப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சஜித் காஸ்மி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போல் மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும். புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் வாட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போதே 7 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு குறைத்துள்ளதால் இன்னும் அதிகமாக புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை அனைத்து மாநிலங்களையும் விட குறைவாக உள்ளது. மக்களுக்கான சுமையை குறைக்க வேண்டும். மத்திய அரசுபோல் மாநில அரசும் வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்