தபால்காரர்கள் மூலம் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கலாம்
வீட்டில் இருந்தபடியே தபால்காரர்கள் மூலம் வாழ்நாள் சான்றை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.;
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாழ்நாள் சான்று
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஆண்டு 7 லட்சத்து 198 ஓய்வூதியர்கள் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேரில் சென்று உயிர்வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
தபால்காரர்கள் மூலம்
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால் உடனடியாக டிஜிட்டல் உயிர்வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 75 பேர் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ்நாள் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்தனர். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலூர் கோட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலமாகவும், ஸ்மார்ட் போன்கள், பயோ மெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 450-க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும், இதர சேவைகளை வழங்கி வருகிறது.
எனவே தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.