ஆசிரியர், பெற்றோர் சொல்வதை கேட்டு செயல்பட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
“ஆசிரியர், பெற்றோர் சொல்வதை கேட்டு செயல்பட்டால் மாணவிகள் வாழ்க்கை சிறப்பாக அமையும்” என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.;
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்லூரி பருவம் மிகவும் மகிழ்ச்சியான பருவம். இதனை அனுபவிக்க வேண்டும். அதே நேரத்தில் கடமையில் இருந்து தவறி விடக்கூடாது. கல்லூரியில் பல கட்டுப்பாடுகள் இருக்கும். அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும். கட்டுப்பாடு வேறு, அடிமைத்தனம் என்பது வேறு. ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்வதை கேட்டு செயல்பட்டால் நம் வாழ்க்கை சிறப்பாக நல்ல பாதையில் அமையும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை, வாய்ப்பு உள்ளது. முடிவு எடுக்கும் திறனை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளுக்காகவும், உடல் உழைப்புக்காகவும் சிறுவர்கள் கடத்தல் சம்பவம் நடக்கிறது. இதனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினைகள் என்றால் 1098, 1091, 181 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில், வேம்படி இசக்கியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், உச்சினிமகாளி அம்மன் கோவில்களில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 8 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.