மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Update: 2022-06-15 19:50 GMT

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நடத்தையில் சந்தேகம்

தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா இந்தளூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 66). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மலர்க்கொடி(55). இவர், இந்தளூரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சத்துணவுக்கூட உதவியாளராக 20 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

பன்னீர்செல்வத்துக்கு தனது மனைவியின் நடந்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் அவர் தனது மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தினார். அப்போதும் மலர்க்கொடி எதிர்த்து பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த அவர், மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

வெட்டிக்கொலை

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி வேலை முடிந்தவுடன் பள்ளிக்கு அருகில் உள்ள கருவேலங்காட்டிற்கு முள்வெட்ட வரும்படி மலர்க்கொடியிடம், பன்னீர்செல்வம் கூறினார். அதன்படி மதியம் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் கருவேலங்காட்டிற்கு மலர்க்கொடி சென்றபோது அவருக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியின் கழுத்தை பிடித்து கீழே தள்ளியதுடன் கழுத்தில் காலால் மிதித்துக்கொண்டு முள்வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளால் மலர்க்கொடியின் கழுத்தை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி டி.வி.மணி விசாரணை செய்து பன்னீர்செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயபிரியா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்