தலைமறைவாக இருந்தவர் கைது
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் போலீஸ் நிலைய சரகத்தில் 2013-ம் ஆண்டு செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் செல்வகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சரவணன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார் இந்த வழக்கு தொடர்பாக லாலி மணிகண்டன், பூபதி, மகாமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் 3 பேருக்கும், 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் இந்த தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுதலையாகினர். அரசு இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதைதொடர்ந்து மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த லாலி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பூபதி மற்றும் மகாமணியை பிடிக்க திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மகாமணியை கைது செய்து தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.