சேலம் அருகேகாதல் மனைவியை எரித்துக்கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனைமகிளா கோர்ட்டு தீர்ப்பு
சேலம் அருகே காதல் மனைவியை எரித்துக்கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சேலம்
சேலம் அருகே காதல் மனைவியை எரித்துக்கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
எரித்து கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அட்டவணை பூலாவரி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34), லாரி டிரைவர். இவரும், தீவட்டிப்பட்டியை சேர்ந்த கவுசல்யா தேவியும் (21) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி பலத்த தீக்காயங்களுடன் கவுசல்யா தேவி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கவுசல்யா தேவி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக அவரது உறவினர்களிடம் குமார் தெரிவித்து நாடகமாடினார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் 1-ந் தேதி கவுசல்யா தேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குடும்ப பிரச்சினையில் கவுசல்யா தேவி மீது குமார் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொலை செய்தது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
அதைத்தொடர்ந்து குமார் மற்றும் அவரது தந்தை ராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் மனைவியை எரித்து கொன்ற குற்றத்திற்காக குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பு கூறினார். குமாரின் தந்தை ராமன் விடுதலை செய்யப்பட்டார்.