தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-02-28 13:58 GMT

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கூலித்தொழிலாளி

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா இனாம்புலியூரை சேர்ந்தவர் வேலுசாமி. விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதியின் மகன் தேவா(வயது 22). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் வேலுசாமியின் உறவினர் மகளை முதலைப்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தன் (22) என்பவர் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த வேலுசாமியின் மகன் தேவா, ஜெயகாந்தனை கண்டித்தார்.

தொந்தரவு

ஆனாலும் ஜெயகாந்தன் தொடர்ந்து அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 13-ந் தேதி தேவா, அவருடைய தாய் செல்வி மற்றும் உறவினர்கள் முதலைப்பட்டிக்கு சென்று ஜெயகாந்தனை தட்டி கேட்டனர். அப்போது தேவாவுக்கும், ஜெயகாந்தனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மறுநாள் (14-ந் தேதி) தேவா வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ஜெயகாந்தன் உள்ளிட்ட சிலர் தேவாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதை தடுக்க முயன்ற செல்வியையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வேலுசாமி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதலைப்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தன், பள்ளக்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (25) உள்பட 10 பேரை கைது செய்தனர்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2018-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ஜெயக்குமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயகாந்தன், ரஞ்சித் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார். மேலும், 3 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். மீதமுள்ள 5 பேர் சிறார்கள் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தனியாக நடைபெற்று வருகிறது.

மேலும், குளித்தலை இரட்டைகொலை வழக்கில் ஜெயகாந்தன் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்