விதை விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்

சரியான சேமிப்பு முறையை கடைபிடிக்காத விதை விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-12 18:45 GMT

சரியான சேமிப்பு முறையை கடைபிடிக்காத விதை விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல் விதைகள்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவுச்சான்று பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளர்களிடம் பெற்று ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.

நடவடிக்கை

புதிய ரகங்கள் இந்த பருவத்துக்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிர்வருதல், கதிர் வராமலேயே இருந்தல் போன்ற பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது.

எனவே கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும். சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை நகல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். விதை தொடர்பான அனைத்து தகவல்களை குறிப்பிட்டு விவசாயிகளின் கையொப்பம் பெற்று விதை வழங்க வேண்டும். சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்