ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக ஒன்றிணைந்து உழைப்போம்: அண்ணாமலை
அய்யா வைகுண்டரின் 192 -வது அவதார தினத்தைக் கொண்டாடும் பக்தர்கள் அனைவருக்கும் பா.ஜ.க சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு சாமிதோப்பு தலைமைப்பதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது. சாமிதோப்பு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக இன்று சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு அய்யாவழி பக்தர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, சமூகத்தில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர் . அன்பு, அறிவு, பொய்யாமை, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை ஒழுக்க நெறியாகப் போதித்தவர். நமது பாரதப் பிரதமரின் 'வாசுதேவ குடும்பம்' என்ற நோக்கம், அய்யா வைகுண்டர் அவர்களின் 'உலகம் ஒரு குடையின் கீழ் இயங்க வேண்டும்' என்ற உயரிய எண்ணத்தின் செயல்பாடுதான். அய்யா வைகுண்டர் வழி நடப்போம். ஏற்றத்தாழ்வு இல்லாத, சமுதாயம் உருவாக ஒன்றிணைந்து உழைப்போம்" என்று கூறியுள்ளார்.