இந்திய விடுதலைக்காகப் போராடிய கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ" என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்!
தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்!" என்று தெரிவித்து உள்ளார்.