அரசு பள்ளியில் வகுப்பறை இல்லாததால் மாணவர்களுக்கு மரத்தின் அடியில் பாடம்

மானாமதுரை பர்மா காலனி அரசு பள்ளியில் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

Update: 2022-06-22 19:04 GMT

மானாமதுரை

மானாமதுரை பர்மா காலனி அரசு பள்ளியில் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

மரத்தடியில் பாடம்

மானாமதுரை பர்மா காலனியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நடுநிலைப்பள்ளியில் 3,4,5-ம் வகுப்பறைகள் ஒரு கட்டிடத்திலும், 6-ம் வகுப்பு ஒரு கட்டிடத்திலும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இதில் 3-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பறை வரை உள்ள கட்டிடம் பழுதானதால் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதே போல் 6-ம் வகுப்பு கட்டிடம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் இதில் படித்த மாணவ-மாணவிகள் 7-ம் வகுப்பு கட்டிடத்தில் மாற்றப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.

ஆனால் இடப்பற்றாக்குறையால் சில வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இடித்த வகுப்பறைக்கு பதிலாக புதிதாக கட்டிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இடப்பற்றாக்குறை

இதுகுறித்து வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன் கூறுகையில்,

பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு வகுப்பறைக்குள் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சில வகுப்பு மாணவ-மாணவிகள் மரத்தடியில் வெயிலில் உட்கார்ந்து படித்து வருகின்றனர். எனவே இடப்பற்றாக்குறை இருக்கும் நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்