தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நெல்லையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.;
நெல்லையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
மகாத்மா காந்தி நினைவு தினமான நேற்று தொழுநோய் ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றதுடன், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கினர்.
தொழுநோய் ஒழிப்பு பணிகள்
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறுகையில், தொழுநோய் ஒழிப்பு நாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஊனத்தடுப்பு முகாம், தோல் நோய் முகாம், பயிற்சிகள், பரிசோதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 9 வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதியில் தொழுநோய் ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் நவீன கூட்டு மருந்து சிகிச்சை மூலம் முழுமையாக குணமடையலாம். இந்த வாய்ப்பை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர் கோகுல், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ராமநாதன், தொழுநோய் தடுப்பு துணை இயக்குனர் அலார் சாந்தி, காசநோய் தடுப்பு துணை இயக்குனர் வெள்ளைசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், தோல்நோய் பிரிவு துறை தலைவர் நிர்மலாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.