ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தை தோல் பறிமுதல்

விற்க கொண்டு வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தை தோல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-19 21:23 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி பகுதியில் சிறுத்தை தோலை சிலர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்து வைத்திருப்பதாக சென்னை வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த சூரியநாராயணன் (வயது 42) என்பதும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

சிறுத்தை தோல்

தொடர்ந்து வனத்துறையினர், சூரியநாராயணன் கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் நன்கு பதப்படுத்தப்பட்ட சிறுத்தையின் தோல் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தோல் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தையை வேட்டையாடி கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கைது

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்து, சிறுத்தை தோலை பறிமுதல் செய்தனர். சிறுத்தை தோலை நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கி வைத்து இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வனத்துறையினர் சூரியநாராயணனை, தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் எந்த பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது, அது யாரிடம் விற்கப்பட இருந்தது என்பதை கண்டறிய வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்