கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தைப்புலி
தாளவாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்து குதறியது.
தாளவாடி
தாளவாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்து குதறியது.
கன்றுக்குட்டி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைப்புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
தாளவாடி அருகே உள்ள ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது38). விவசாயி. இவர் வீட்டின் அருகே தோட்டம் உள்ளது. இங்கு அவர் கொட்டகை அமைத்து 4 மாடுகள், ஒரு கன்றுக்குட்டி வளர்த்து வந்தார்.
காயத்துடன் கிடந்தது
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவர் மாடுகளையும், கன்றுக்குட்டியையும் விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் அவற்றை கொட்டகையில் கட்டி வைப்பதற்காக அழைத்துவர சென்றார்.அப்போது அங்கு மாடுகள் மட்டும் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் அருகே கன்றுக்குட்டி கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அதன் உடல் அருகே ஏதோ ஒரு விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது.
சிறுத்தைப்புலி கடித்து கொன்றது
இதுகுறித்து செல்வக்குமார் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர். அப்போது பதிவானது சிறுத்தைப்புலியின் கால்தடம் என்பது தெரியவந்தது. வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தைப்புலி மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து குதறி கொன்றுவிட்டு் அங்கிருந்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதை கூண்டு வைத்து பிடிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.