9 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டு சென்றார்: பயணம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும் முதல்-அமைச்சர் பேட்டி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டு சென்றார். வெளிநாடு பயணம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-24 00:25 GMT

சென்னை,

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை குவிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக 9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்வார் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நேற்று மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் கருணாநிதி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அப்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதன்மோகன் உடன் இருந்தனர்.

சிங்கப்பூர் புறப்பட்டார்

வெளிநாடு பயணம் செல்ல உள்ளதையொட்டி, மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கவுதம் சிகாமணி, முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 11.41 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் சென்ற விமானத்தில் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தின் உள்ளே செல்லும்போது அவரை, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் உள்பட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கைகளை அசைத்தவாறு உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அவர்களை நோக்கி மு.க.ஸ்டாலினும் பதிலுக்கு இருகரங்களை கூப்பி வணக்கம் செலுத்தியவாறும் கை அசைத்தார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதலீட்டாளர்கள் மாநாடு

வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கிறோம். அந்த அடிப்படையில், 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். என்னோடு தொழில்துறை அமைச்சரும், அரசு துறையினுடைய உயர் அதிகாரிகளும் வருகிறார்கள்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளோடு ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே, இப்போது ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்த பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதோடு முதலீட்டாளர்களை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்தும் பேசவிருக்கிறேன்.

முக்கிய நோக்கம்

ஒரு சில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. இந்த பயணத்தினுடைய முக்கிய நோக்கம் என்பது வருகிற ஜனவரி மாதம் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதுதான். ஆகவே, அந்த நோக்கத்தோடுதான் செல்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இதையடுத்து, மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் குறித்து...

பதில்:- கடந்த மார்ச் மாதம் நான் மேற்கொண்ட துபாய் பயணத்தின்போது ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லூலூ பன்னாட்டு குழுமம் கோவையில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது. சென்னையில், தன் திட்டத்துக்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணிகளை தொடங்க தயாராக இருக்கிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் அதாவது, ஜூலை 2021 முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும்போது, 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும். அந்த அடிப்படையில்தான், இந்த பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்படும்?

கேள்வி:- சிங்கப்பூர், ஜப்பானை தொடர்ந்து வேறு எந்தெந்த நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள்?

பதில்:- அது பின்னர் தான் முடிவு செய்யப்படும்.

கேள்வி:- முதலீடுகள் எவ்வளவு ஈர்க்கப்பட உள்ளது?

பதில்:- கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களை சந்திக்க இருக்கிறோம். அங்கு சென்ற பிறகுதான் முடிவு செய்யப்படும்.

கேள்வி:- இந்த பயணம் வெற்றிகரமாக முடியுமா?

பதில்:- நிச்சயம் வெற்றிகரமாக முடியும். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

பேண்ட்-சட்டையில் மிடுக்காக வந்த மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் வேட்டி மற்றும் அரைக்கை சட்டை அணிவது வழக்கம். மற்ற சமயங்களில் பங்கேற்கும் நிகழ்வுகளை பொறுத்து, அதற்கேற்றவாறு தகுந்த உடைகளை அணிந்து கொள்வார். அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக அணியும் வேட்டி, சட்டைக்கு பதிலாக நேற்று பேண்ட் மற்றும் முழுக்கை சட்டையுடன் தோன்றினார்.

இந்த உடை அவருக்கு மேலும் அழகு சேர்த்தது. பார்ப்பதற்கு கல்லூரிக்கு செல்லும் இளைஞர் போலவே மிடுக்காக காட்சி அளிக்கிறார் என்று அவரை வழியனுப்புவதற்காக விமான நிலையம் வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூறியவாறு சென்றதை கேட்கமுடிந்தது.

உடன் சென்றவர்கள் யார்? யார்?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்-அமைச்சரின் செயலாளர்-2 உமாநாத், முதல்-அமைச்சரின் செயலாளர்-4 அனு ஜார்ஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மோகன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்-அமைச்சரின் முதன்மை தனி உதவியாளர் தினேஷ்குமார் ஆகியோர் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்