மாணவர்களின் கற்றல் திறன் குறித்து தொடர் ஆய்வு செய்ய வேண்டும்பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி உத்தரவு

மாணவர்களின் கற்றல் திறன் குறித்து தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-17 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

'இல்லம் தேடி கல்வி" திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை வளர்த்திடும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 2,489 குடியிருப்புகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 1,29,090 மாணவர்களுக்கு 7,726 தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் 80 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி உட்கட்டமைப்பு

'புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம்" மூலம் முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயது மேற்பட்டவர்களுக்கு எண்ணறிவு, எழுத்தறிவு வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 1,163 தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் 1,163 மையங்களில் 19,326 பேருக்கு எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.

'நம் பள்ளி நம் பெருமை - பள்ளி மேலாண்மைக்குழு" இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி 1,289 அரசுப்பள்ளிகளில் 25,870 உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவின் மூலம் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பள்ளி உட்கட்டமைப்புகள் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் 'நம்ம ஸ்கூல் - நம்ம ஊர் பள்ளி" திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் 1,293 அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு இதன் மூலம் முன்னேற்றம் அடையும்.

அறிவுரை

'முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம்" மூலம் விழுப்புரம்- திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 19 தொடக்கப்பள்ளிகளில் 1,737 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 'வானவில் மன்றம்" மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித மனப்பான்மையை மேம்படுத்திடும் வகையில் 218 அரசு நடுநிலைப்பள்ளிகள், 120 உயர்நிலைப்பள்ளிகள், 120 மேல்நிலைப்பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 51,825 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதுபோன்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திடும் வகையில் கலை அரங்கம், கலைத்திருவிழா, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த உயர் அலுவலர்கள் பள்ளிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புதுமையான திட்டங்கள் வருகின்றபோது அதற்கான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன், மணிமொழி, கிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், செல்வராஜ் மற்றும் மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்