பழனி அருகே சாலையில் சாய்ந்த மரம்
பழனி அருகே மரம் வேருடன் சாலையில் சாய்ந்து விழுந்தது.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பழனி அருகே மானூர் அண்ணாநகர் பகுதியில், பழனி-தாராபுரம் சாலையோரம் இருந்த மரம் ஒன்று நேற்று காலை திடீரென்று வேருடன் சாலையில் சாய்ந்தது. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் சாலையில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மரம் சாய்ந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் பஸ், லாரி என கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது. மரம் சாய்ந்ததால் பழனி-தாராபுரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.