சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு தலித் அமைப்புகளின் வக்கீல்கள் குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் சசிகுமார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் இளையராஜா, பார்த்திபன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோர்ட்டு வளாகத்தில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும், அம்பேத்கர் படத்தை வைப்பதற்கு அனுமதிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் பிரதாபன், பொன்.ரமணி, மாசிலாமணி, திருமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.